சென்னை, டிச.26:  தமிழகத்தில் சுனாமி தாக்கி உயிரிழந்தோரின் நினைவாக அவர்களின் உறவினர்கள் கடற்கரைகளில் இன்று பால் ஊற்றியும், மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004 இதே நாளில், இந்தோனேஷியா சுமத்ரா தீவில் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.தாலாட்டுடன் கரையைத் தொட்டுச் சென்ற வங்கக் கடலின் அலைகள் அன்று திடீரென தனது ஆக்ரோஷத்தைக் காட்டின. பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் மக்கள் சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றது. ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
தமிழகத்தை சுனாமி தாக்கி 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், தமிழகத்தின் கடலோரப்பகுதி மக்கள் இன்றளவும் மனதளவில் அதன் அச்சத்திலிருந்து விலகாதவர்களாகவே உள்ளனர்.நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, செருதூர், நாகூர், நம்பியார்நகர் உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களில் சுனாமி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் 300க்கும் மேற்பபட்ட பெண்கள் மவுன ஊர்வலம் சென்றனர். தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சாமியார்பேட்டை, சோனாங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், சுனாமியால் உயிரிழந்த தங்களது உறவினர்களுக்கு, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், கூடைகளில் கொண்டு வந்த பூக்களை கடலில் தூவினர். சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் ஞாபகமாக சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் சுனாமி நினைவாக இன்று பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காசிமேடு துறைமுகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பாலூற்றி அஞ்சலி செலுத்தினார். மெரினா கடற்கரையில் நடிகை கௌதமி,மீனவ இயக்க தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அதே போல், பட்டினபாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பால் ஊற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.இதில் நொச்சிக்குப்பம் பாண்டியன், சாந்தி, நாச்சிக்குளம் சரவணன், சைதை முத்தமிழ் , பட்டினப்பாக்கம் பன்னீர், திருவான்மியூர் சீதாராமன், சைதை கார்த்திக் , தேசப்பன், காலனி சரவணன், ஆட்டோ தங்கராஜ், கௌரிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.