செங்குன்றம், டிச.26: புழல் அருகே குடும்பத் தகராறால் ஆத்திரம் அடங்காத கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவீரன் (வயது 40). இவர், சென்னை பாடியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்துள்ளார். இவரது மனைவி சஜினா (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவருவதாக தெரிகிறது. இதன்காரணமாக, சஜினா தனது தாய்வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த 6 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். கடந்த 2 வாரத்திற்கு முன்னர்தான், சஜினாவின் தாய் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி, மனைவியை தன்னுடன் புழல் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார், வெற்றிவீரன்.

இந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் வெற்றிவீரன்-சஜினாவுக்கு இடையே மீண்டும் குடும்ப சண்டை ஆரம்பித்துள்ளது. இன்று அதிகாலை 5 மணிவரை விடிய விடிய இவர்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆத்திரம் தாங்காத கணவன், சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துவந்து சஜினாவை சரமாரியாக குத்தியுள்ளார். நிலைக்குலைந்த கீழே சரிந்த சஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மனைவியை தீர்த்துக்கட்டிய கையோடு புழல் காவல் நிலையத்திற்கு சென்று வெற்றிவீரன் போலீசில் சரணடைந்துள்ளார். உதவி கமிஷனர் ரவி மற்றும் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சஜினாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெற்றிவீரனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.