சென்னை, டிச.26:  தனது இடத்திற்கு நியமிக்கப்பட்ட காவலாளியை பொறாமை நிமித்தமாக தீர்த்துக்கட்டிய சக காவலாளி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரத்னகுமார் (வயது 58). இவர், தி.நகர் திருமலைபிள்ளை சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இவருக்கும் மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ரத்னகுமாரை அந்த நபர் தாக்கியதில், ரத்னகுமார் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் ரத்னகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்னகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இது தொடர்பாக, பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி சரவணன் (வயது 41) என்பவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரத்னகுமார் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
குடிபோதையில் இருந்த காரணத்தால் என்னை வேலையைவிட்டு நிறுத்திய உரிமையாளர், எனது பணியிடத்தில் ரத்னகுமாரை நியமித்ததால், ஆத்திரம் தாங்காமல் ரத்னகுமாரிடம் சென்று சண்டையிட்டேன், அப்போது எழுந்த தகராறால் ரத்னகுமாரை தாக்கியதாக சரவணன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.