சென்னை, டிச.26: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகல்களை பெற்றுக் கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசார், மனிதநேய மக்கள் கட்சித் தலைவார் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவார் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனார்.இதேபோல எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீதும், வைகோ உள்ளிட்டோர் மீது எழும்பூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, அனைவருக்கும் நீதிபதி ரமேஷ் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன், கராத்தே தியாகராஜன் மட்டும் ஆஜராகியிருந்தனர். சம்மன் கிடைக்காததால் ஆஜராகவில்லை என ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.