வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் தெரிந்தது

TOP-2

சென்னை, டிச.26: வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் தமிழகத்தில் 90 சதவீதம் தெரிந்தது. மக்கள் ஆர்வத்துடன் ஆங்காங்கே நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பாதுகாப்பான சாதனங்கள் மூலம் கண்டுகளித்தனர்.
விண்ணில் நிகழும் அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு தமிழகத்தில் நீலகிரியில் தெரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.
ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூரிய கிரகணம் தெளிவாக தெரியவில்லை.
மேலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. கேரளாவின் கொச்சியிலும் ஒடிஷாவின் புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.
சென்னை பிர்லா கோளரங்கம், பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு வானவியல் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இந்த அரிய நிகழ்வை பார்த்தனர்.


சூரியனை சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து பின்னர் முழுவதுமாக மறைத்த போது ‘தீ வளைய சூரிய கிரகணம்’ நிகழ்ந்த போது மக்கள் உற்சாகமாக குரலெழுப்பி மகிழ்ந்தனர்.
ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. திண்டுக்கல் மாவட்டதில் சூரிய கிரகணமும் வானம் ஒரு பக்கம் இருண்டும் காணப்பட்டது.
சூரிய கிரகணம் தொடர்பாக, ஊட்டி வானியல் ஆய்வு மைய விஞ்ஞானி சுரேந்திர குல்கர்னி கூறுகையில், இந்த சூரிய கிரகணம் மங்களூரு, காசர்கோடு, கோழிக்கோடு, பாலக்காடு, ஊட்டி, கோவை, கரூர், தூத்துக்குடியில் காலை 9.26 முதல் 9.28 வரை தெரிந்தது. ஊட்டியில் தான் 99 சதவீத சூரிய கிரகணம் தெரிந்தது.
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த அரிய நிகழ்வை காண கடலூர் வெள்ளி கடற்கரையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அனைவரும் காணும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் சார்பாக தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு முறைகளில் கிரகணத்தை பார்வையிட்டு வருகின்றனர்
தொடர்ந்து கடலூர் பெரியார் கல்லூரி முன்பு உள்ள ஆலமரத்தின் மேல்பட்ட கிரகண ஒளியால் தரை முழுவதும் நிலா வடிவத்தில் நிழல் பிரதிபலித்தது. இந்த காட்சி பிரமிப்பாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
கோயில்கள் நடை அடைப்பு:
சூரிய கிரகணம் தெரிந்த இந்த நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில், திருநள்ளாறு கோயில் நடைகள் அடைக்கப்பட்டன. அதே போன்று காஞ்சிபுர மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1200 கோவில்கள் மூடப்பட்டுள்ளன.


இன்று காலை 7 மணியளவில் முக்கியமான கோவிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலும் அதேப்போல் அந்த 108 திவ்ய திசைகளின் முக்கியமான வரதராஜ பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் முக்கியமான ஏகாம்பரநாதர் கோவில் அதிகாலை பூஜை நடைபெற்று பின்பு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டது. நடை சாத்தப்பட்டதன் பின்பாக அந்த பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அந்த பூஜை புனஸ்காரம் பிறகு 4 மணிக்கு அனுமதிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் நடைகள் சாத்தப்பட்டன.