மாஸ்கோ, டிச.28: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ள 4 ஆண்டுகள் தடை உத்தரவை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு செய்துள்ளது.

ரஷ்ய நாட்டின் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்த அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் 15 மாத தடைவிதிக்கப்பட்டது. இதனால், அந்த ஒலிம்பிக்கில் ரஷ்யர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர், இதுகுறித்து நடைபெற்ற தொடர் விசாரணையில், சர்வதேச போட்டிகளில் ரஷ்ய நாட்டினர் பங்கேற்பதற்கு 4 ஆண்டுகள் தடைவிதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம்(டபிள்யூ.ஏ.டி.ஏ) தீர்ப்பளித்தது.

இதனால், 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக், 2022-ம் ஆண்டு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக், 2022-ம் ஆண்டின் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து ஆகியவற்றில் ரஷ்ய நாட்டினை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டபிள்யூ.ஏ.டி.ஏ தீர்ப்புக்கு எதிராக, சுவிட்சர்லாந்திலுள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ரஷ்யா மேல்முறையீடு செய்துள்ளது. இது குறித்த விசாரணை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.