தர்பாரில் மிடுக்கான, ஸ்டைலான, துடிப்பான ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ்

TOP-2 சினிமா தமிழ்நாடு

சென்னை, டிச.28: சூப்பர்ஸ்டாரின் ‘தர்பார்’ படம் ரசிகர்களுக்கு வித்தியாசமாகவும், ரஜினியின் பழைய மிடுக்கான, ஸ்டைலான, துடிப்பான எனர்ஜியுடனும் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

‘தர்பார்’ பட ஹைலைட்ஸ் பற்றி மாலைச்சுடருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் முருகதாஸ் கூறியதாவது:-

‘தர்பார்’ படம் மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இந்த கதையின் கருவை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியை சந்தித்த போது கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்ததால், இணைந்து பணியாற்றினோம்.

மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். கட்டிட கலை வல்லுனராக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லனாக சுனில் ஷெட்டி கலக்கி உள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான படமாக அமையும். ஏனென்றால் ரஜினி இதுவரை நடித்துள்ள எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது.

சமீப கால படங்களில் ரஜினியின் பாணி சில இடம் பெறாமல் உள்ளது. ஆனால் இதில் 90-களில் ரஜினியின் மிடுக்கான, ஸ்டைலான, துடிப்பான எனர்ஜியை பார்க்க முடியும். போலீஸ் கதை என்பதால் அவுட்டோர் ஷூட்டிங் அதிக அளவில் நடத்த வேண்டும். இங்கு நடத்தினால் ரசிகர்கள் அதிக அளவில் வந்துவிடுவார்கள் என்பதற்காக மும்பையை கதை களமாக தேர்ந்தெடுத்தோம்.
அது தவிர இந்த படம் ஒரு பான்-இந்தியா மூவி என்பதால் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. அதற்கும் இந்த களம் உதவியாக இருக்கும் என்பதால் இதை முடிவு செய்தோம்.

போலீஸ் அதிகாரி தாடி, பரட்டை தலையுடன் நடித்திருப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் அதற்கான விளக்கங்கள் படத்தில் தரப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சில சமூக அக்கறையுள்ள விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது.

அதே போல் பாடல்களும் துள்ளலாக இருக்க வேண்டும் என்பதற்காக எஸ்பிபி, அனிரூத், விவேக் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது. ரஜினியின் ஓபனிங் சீன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

மீண்டும் ரஜினியுடன் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். சந்திரமுகி-2 கதையை நான் அவரிடம் சொல்லி உள்ளேன். அவருக்கும் அது பிடித்தது. இருப்பினும் அதில் நடிப்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.