சென்னை, டிச.30:  குடிபோதை தலைக்கேறியதன் விளைவாக கடத்தல் நாடகமாடிய தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடன் சென்ற கார் டிரைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அயப்பாக்கத்தை சேர்ந்தவர் முகேஷ் (வயது 32). டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்திவரும் தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் 1 மணியளவில் மதுரவாயல் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ரூ.25 லட்சம் கேட்டு தில்பாண்டி என்பவர் தன்னை காரில் கடத்தி சென்றதாகவும், டிராப்பிக்கில் கார் நின்றுக்கொண்டிருந்ததை பயன்படுத்தி, கீழே இறங்கி தப்பித்து ஓடி வந்துவிட்டதாகவும் தனது புகாரில் முகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த காரினை ஓட்டிச்சென்ற வில்லிவாக்கத்தை சேர்ந்த ஓம்பிரசாத் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

நண்பர்களான தில் பாண்டியும், முகேஷூம், வில்லிவாக்கம் பகுதியில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம், அவர்களுக்கு நான் தான் வழக்கமாக டிரைவராக உள்ளேன். சம்பவத்தன்றும் வழக்கத்தின்படி மது அருந்திவிட்டு காரில் வந்துக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, முகேஷ் காரினை விட்டு இறங்கிசெல்லவேண்டும் என கூறவே, நான் காரை நிறுத்திவிட்டேன்.

அவரும் காரில் இருந்து இறங்கி குடிபோதையில் இவ்வாறான பொய்புகார் அளித்துள்ளார் என்று ஓம்பிரசாத், போலீசில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலியாக புகார் அளித்து போலீசாரின் நேரத்தை விரயம் செய்த முகேஷ் மற்றும் ஓம்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.