சென்னை, டிச.31: திருச்சி நகைக்கடை கொள்ளையன் தன்னை பிடிக்காமல் இருப்பதற்கு சென்னையில் பணியாற்றும் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளான். இதையொட்டி, இந்த இருவரும் வரும் 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகவேண்டும் என்று சமயபுரம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபரில் நடந்த கொள்ளை தொடர்பாக திருவாரூர் முருகன் கைது செய்யப்பட்டான். இவனிடம் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னையில் அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டிலும், இன்னொரு நகைக்கடையிலும் கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும், சமயபுரம் டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். இந்த வழக்குகளில் இவனை தேடிவந்தபோது, பூந்தமல்லி அருகே ஒரு காபி கடையில் காருடன் நின்றுக்கொண்டிருந்தபோது பிடிப்பட்டு இருக்கிறான். அப்போது, கைது செய்யாமல் இருப்பதற்காக சென்னையில் பணியாற்றும் ஒரு ஆய்வாளர் மற்றும் ஒரு காவலருக்கு முதலில் ரூ.10 லட்சமும், பின்னர் ரூ.30 லட்சமும் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளான்.

இது குறித்து, முருகன் அளித்த வாக்குமூலத்தில், வங்கி கொள்ளையில் இருந்து ரூ.10 லட்சத்தையும், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நான்கரை கிலோ தங்கத்தில் இருந்து ரூ.20 லட்சமும் கொடுத்ததாக ஒப்புக்கொண்டான் என்று போலீசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வரும் 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு புளியந்தோப்பில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இன்னொரு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜோசப் ஆகியோருக்கு சமயபுரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.