பிரிஸ்பன், ஜன.2: உலகின் தலை சிறந்த வீரர்களை உள்ளடக்கிய 24 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும் ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்த ஆண்டு முதல் நடத்தப்பட உள்ள இந்த தொடர், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. நாளை (3-ம் தேதி) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், இத்தாலியின் பேபியோ போக்னி, கிரீஸின் ஸ்டேபானோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரெவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலர் பங்கேற்கின்றனர். தரவரிசையில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் சொந்த காரணங்களுக்காக கலந்து கொள்ள மறுத்ததால் கடைசி நேரத்தில் சுவிட்சர்லாந்து அணி விலகிக் கொண்டது.

முதல் 6 நாட்கள் ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. 9 மற்றும் 10-ம் தேதிகளில் காலிறுதி ஆட்டங்களும், 11-ம் தேதி அரையிறுதியும், 12-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி சிட்னியில் உள்ள கென் ரோஸ்வால் அரினாவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
இரு அணிகளின் மோதலில் ஒற்றையர் பிரிவில் 2 ஆட்டங்கள், இரட்டையர் பிரிவில் ஒரு ஆட்டம் நடத்தப்படும். அதிகபட்சமாக இரு மோதல்களில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதி சுற்றில் எளிதாக கால் பதிக்கும். இந்தத் தொடரின் பரிசுத் தொகை ரூ.1.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.