புதுடெல்லி, ஜன.2: தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எந்த ஆவணங்களும் கொடுக்கப்பட வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவு என்பது இந்தியாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் குறித்த பதிவேடு (என்பிஆர்). குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2003 ஆகிய விதிகளின் அடிப்படையில் தேசிய, மாநில, மாவட்ட, கிராம அளவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்படுகிறது.

யாரேனும் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆறு மாதமோ அல்லது அதற்கு அதிகமான காலம் வசித்தாலோ அல்லது ஒரு இடத்தில் ஆறு மாத காலம் வசிக்க இருந்தால் அவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம் அளிக்கப்படும். இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்புவாசிகளை பதிவு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாகும். ஒரு இடத்தில் ஆறு மாத காலம் தங்கியிருப்பதோ அல்லது ஆறு மாத காலம் தங்கவிருப்பதோ அவரை ஒரு சாதாரண குடியிருப்புவாசியாக கருதுவதற்கு போதுமான ஒன்று ஆகும். குடியுரிமை விதிகள் 2003-ன் படி, ‘மக்கள்தொகை பதிவேடு, ஒருவரின் வாழும் கிராமம், நகரம், வார்டு உள்ளிட்ட விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும். 2019-ம் ஆண்டில் அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில், குடியுரிமை விதிகள் 2003-ன் விதி 3-ன் படி, மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அசாம் தவிர மற்ற மாநிலங்களில் வீடு வீடாகச் சென்று குடியிருப்புவாசிகள் குறித்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கணக்கெடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடியிருப்புவாசிகளுக்கும் விரிவான அடையாள தகவல் தளத்தை உருவாக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம். அது, மக்கள் தொகை கணக்கையும் அங்கம் சார்ந்த தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பதிவேட்டுக்காக, 2010-ம் ஆண்டு வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப்பட்டது. பின்னர், 2015-ம் ஆண்டு அந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டன. தற்போது, 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பதிவேட்டுக்காக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பின் போது கணக்கெடுக்க வருபவர்களிடம் பதிலளிப்பவர்கள் ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும், ‘குடும்பங்கள் பழைய ஆவணங்களைத் தோண்டி எடுக்க வேண்டும், மேலும் அத்தகைய ஆவணங்கள் உறுதிப்படுத்த கணக்கீட்டாளர்கள் அந்த ஆவணங்களை பார்வையிடுவார்கள் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி ஹிண்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய உள்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக எந்தவொரு நபரும் எந்தவொரு ஆவணத்தையும் அவரது வீட்டுக்கு வருகை தரும் கணக்கீட்டாளருக்கு சமர்ப்பிக்க தேவையில்லை. தனிநபர் வழங்கிய தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கேற்ப பதிவு செய்யப்படும். என கூறி உள்ளது