சென்னை, ஜன.2: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக்கிளைகள் அகற்றுவது தொடர்பான பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலையோரங்களில் சுமார் 1,61,000 மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் மிக உயரமாக வளர்ந்து படர்ந்த கிளைகளுடன் காணப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் உடைமைக்கும், உயிருக்கும் சேதத்தை விளைவிக்கக்கூடிய ஆபத்தான வகையில் உள்ள மரக்கிளைகள், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தாழ்வான கிளைகள் மற்றும் சாலையோர மின்விளக்குகளை மறைக்கும் கிளைகள் ஆகியவற்றை அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மரக்கிளைகளை அகற்றும் பணிகளை விரைந்து செய்ய இயந்திரப் பொறியியல் துறை சார்பில் கடந்த ஆண்டு மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 6 ஹைட்ராலிக் மூலம் இயங்கும் மரக்கிளைகளை அகற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

மண்டலங்களில் பணிபுரியும் பூங்கா மேற்பார்வையாளர்கள் மற்றும் பணிப்பார்வையாளர்கள் மூலம் அவ்வப்போது களஆய்வு செய்து, இந்த இயந்திரங்களைக் கொண்டு மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு மையத்தின் மூலமாக புகார் செய்யலாம். மேலும் அந்தந்தப் பகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் 1913 என்ற புகார் எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.