சென்னை, ஜன.3: ஈராக் விமான நிலையம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 2 டாலர் அதிகரித்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.55 ஆக சரிந்தது. இதையடுத்து சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.30344 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது.

ஈராக்கில் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய அவர்கள், தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் எதிர் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இன்று காலை பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2 டாலர் அதிகரித்து 68.16 டாலராக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் 0.26 குறைந்து 71.55 ஆக சரிந்தது.

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 0.28 சதவிகிதம் சரிந்து 41.512 ஆனது. நிப்டியின் 0.38 சதவிகிதம் சரிந்து 12,239.50 ஆக இருந்தது.‘

இந்தியா தனது தேவையில் 80 சதவிகிதம் இறக்குமதி செய்கிறது என்பதால் உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு சரிந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையும் உயர்ந்தது.

சென்னையில் புத்தாண்டு தினத்தையொட்டி சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம், நேற்றைய விலையான 29,888 ரூபாய் என்ற நிலையில் இருந்து ஒரே நாளில் 456 ரூபாய் அதிகரித்து தற்போது 30 ஆயிரத்து 344 ரூபாயாகச் விற்கப்படுகிறது.