– கௌசல்யா ஜவஹர் –

எம்பெருமானின் வடிவழகு

காதலின் முதல் வாயில், தோற்றப்பொலிவும், வசீகரமும் என்பது இன்று வரை மறுக்க முடியாத உண்மை. மையல் கொண்ட ஆண்டாள் காதலன் கண்ணனின் வடிவழகை வர்ணிப்பதை காண்போம்.

‘‘மையல் ஏற்றி மயக்க உன் முகம்’’

‘‘மாய மந்திரம் தான் கொலோ’’

‘‘கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்’’

‘‘பங்கயக் கண்ணனைப் பாட’’

‘‘செய்ய தாமரைக் கண்ணினாய்’’

‘‘களி வண்டு எங்கும் கலந்தாற் போல் கமழ் பூங்குழல்கள்’’

‘‘சுந்தரந்தோளுடையான் சுழலையினின்று உய்துங் கொலோ?’’

என்பன ஆண்டாள் மொழிகள். மழைமேகம் போன்ற கருமை நிறக் கண்ணா உன் முகம் என்னை வசீகரித்து மோகத்தில் ஆழ்த்தி கிறங்க வைக்கிறது. அப்படி நான் மதிமயங்கி மையலில் இருக்க உன் முகம் என்ன மாய மந்திரம் செய்ததோ? இப்படி உன் வசம் என்னை இழந்து நிற்கின்றேனே? உன் தாமரைக் கண்களோ என்னை வேறு எதையும் யோசிக்கவிடாமல் கட்டி நிறுத்துகிறது. இந்தச் செங்கமலம் போன்ற சிவந்த கண்கள் ஒளிக்கு கதிரோனாகவும், குளிர்ச்சிக்கு முழுமதியோனாகவும் காட்சி அளிக்கிறது. உன் திருவாயோ செம்பவளம் போன்ற உதடுகளை கொண்டது. உன் கருத்த சுருண்ட தலைமுடிக்கற்றைகள் அவிழ்ந்து, பரந்த உன் தோள்களில் விழுவது, கருமை நிறம் கொண்ட வண்டுகள் பூக்களில் உள்ள தேனைப் பருகி, ஆனந்தம் அடைந்து கும்பலாகப் பறந்து வந்து உன் முடியிலே அமர்ந்தாற்போல் தோற்றம் அளிக்கிறது என்று வர்ணிக்கிறாள்.

ஒரு சராசரிப் பெண் காதல் வயப்படும்போது தன் காதலனை ஒரு அரசனாகக் கற்பனை செய்து வர்ணித்து மகிழ்வது இயல்பே. ஒரு மன்னன் என்பவன் பலரும் போற்றக்கூடியவனாகவும், புகழ்மிக்கவனாகவும், மிடுக்குடன் கூடிய கம்பீரம் மிக்கவனாகவும், வீரதீர செயல்களைச் செய்யும் திறன் கொண்டவனாகவும், அழகும் அறிவுக்களையும் பொருந்திய முகலட்சணம் உடையவனாகவும் இருப்பதே இதற்கு காரணம். காதல் வயப்பட்ட ஆண்டாளும் இதற்கு விதிவிலக்கில்லாமல் கண்ணனைப் பல பாசுரங்களில் மதுரையார் அல்லது துவாரகை மன்னன் என வர்ணிப்பதைக் காணலாம்.

‘‘மாட மாளிகை சூழ் மதுரைப்பதி நாடி’’

‘‘துவராபதிக் காவலன்’’

‘‘மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு சோலை மலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்’’

என்பன ஆண்டாள் வாக்குகள். காதல் மிகுதியாகி தன் கண்ணனை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் பாங்கினைப் பார்க்கலாம்.

‘‘எழிலுடைய அம்மனைமீர்!’’ என் அரங்கத்து இன் அமுதர்

குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர் கொப்பூழில்

|எழுகமலப் பூ அழகர்: எம்மனார் என்னுடைய

கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே’’

என்று பாடி மகிழ்கிறாள்.

திருப்பாவை பாசுரம் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்