– கௌசல்யா ஜவஹர் –

எம்பெருமானின் பெருமை

காதல் வயப்பட்ட கன்னியர்கள் காதலனைப் பற்றிப் பெருமையாக நினைப்பதும், அவனது குணம், வீரதீர செயல்கள் பற்றி உயர்வாக எடுத்துரைப்பதும், அவனை எண்ணி மகிழ்ந்து மற்றவர்களிடம் புகழ்ந்து பேசுதலும் இன்றும் நடைபெறும் இயல்பான நிகழ்வுகள், மறுக்கமுடியாத உணர்வுகள், இவ்வுணர்வுகளை ஆழ்ந்து அனுபவித்த ஆண்டாள், தன் காதலின் பெருமைகளை பாசுரம் தோறும் பறைசாற்றுகிறாள்.

‘‘நாமமாயிரம் ஏற்ற நின்ற நாராயணா! நரனே!’’
‘‘அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல்
துயின்ற எம் ஆதியாய்!’’
‘‘தேவாதிதேவன்!’’, ‘‘ஊழி முதல்வன்!’’ என்று விவரிக்கிறாள்.

காதலன் கண்ணனே இவ்வுலகத்தைத் தோற்றுவிப்பவன், ஊழிக்காலத்தில் தன்னுள் அனைத்தையும் அடக்கிக் கொள்பவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன், ஆயிரம் நாமங்களால் போற்றப்படுபவன் என்று அவன் பெருமைகளை திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் பாசுரம் தோறும் அடுக்கு மொழியில் சொல்லி மகிழ்கிறாள்.

வீரதீர செயல்களை எடுத்தியம்புதல்

என் காதலன் கண்ணன் சர்வேஸ்வரன், அவன் பல அவதாரங்களை எடுத்து மக்களின் துயர் துடைத்தவன், கிருஷ்ணாவதாரத்தில் குழந்தைப் பருவம் முதல் சாகசங்கள் செய்துள்ளான்.

‘‘பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கு அழியக்கால் ஓச்சி’’,
‘‘புள்ளின்வாய் கீண்டானை,’’ ‘‘மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய’’,
‘‘கன்று குணிலா எறிந்தாய்’’ கழல் போற்றி!

தாய் வடிவில் கொல்ல வந்த அரக்கி பூதனையைக் குழந்தை கண்ணன் முடித்ததையும், வண்டி சக்கர வடிவில் வந்த சகடாசுரனை வதைத்ததையும், பறவையின் வடிவில் கொல்லவந்த பகாசுரன் என்ற அசுரனை வாயைக் கிழித்து மாய்த்ததையும், குதிரையாய் வந்த கேசி என்ற அரக்கனைக் கொன்றதையும், கன்று வடிவில் வந்த அசுரனை, எறிதடியாகக் கொண்டு விளாங்கனி வடிவாகத் தொங்கிக் கொண்டிருந்த மற்றொரு அரக்கனை அடித்து, ஒரே சமயத்தில் இரு அரக்கர்களை ஒழித்ததையும் பலவாறு புகழ்ந்து பேசுகிறாள் கோதை. மேலும் கோதை

‘‘அன்று இவ்வுலகம் அளந்தாய் ! அடிபோற்றி!’’
‘‘தேயமும் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்’’
‘‘தென்னிலங்கை செற்றாய்!’’ திறல் போற்றி!
‘‘சங்கமா கடல் கடைந்தான்’’,
‘‘வங்கக்கடல் கடைந்த மாதவனை’’

என மேலும் பூரித்து புகழ்கிறாள். என் கண்ணன் ஸர்வேஸ்வரன்; கருணாமூர்த்தி, பக்தர்களைக் காப்பதற்காக ஒருமுறை வாமனாவதாரம் எடுத்து உலகளந்ததையும், அரக்கர்களை வதைப்பதற்கு இராமாவதாரம் எடுத்ததையும், தேவர்களுக்கு உதவுவதற்காக, சங்குகள் நிறைந்த மாகடலைக் கடைந்து அமிழ்தம் கிடைக்க கூர்மாவதாரம் எடுத்த மேன்மையையும் ஆண்டாள் புளகாங்கித்து சொல்லி மகிழ்கிறாள்.

திருப்பாவை பாசுரம் 19


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவ மன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

திருப்பாவை பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்