– கௌசல்யா ஜவஹர் –

இறையன்பு கொண்டவர்கள் இயற்கை எழிலைக்காணும் தோறும் இறைவனைக் காண்கிறார்கள், இயற்கையைவிடுத்து இறையை உணர்தல் அரிது. இக்காரணத்தாலேயே ஆண்டாள் பாசுரங்களில் இயற்கையை விளித்துத் தன் காதலைப் புலப்படுத்துதல், புலம்புதல் போன்றவற்றை காண முடிகிறது.
காதல் பித்து

மழைக்காலத்தில் வருவேன் என்று உறுதி கூறிய கண்ணன் வரவில்லை. அவன் வருகிறான் என்பதற்கு எந்த ஓர் அறிகுறியும் தெரியவில்லை, எதைக் கண்டாலும், அவன் நினைவே வந்து வாட்டி வதைக்கிறது, செய்வதறியாது திகைக்கிறாள் கோதை. தன் ஆற்றாமையை மழையிடமும், கடலிடமும் கூறி, நெஞ்சுருகக் கதறி, பித்துப்பிடித்தவள் போல் பேசுகிறாள் ஆண்டாள்.
‘‘மழையே! மழையே! மண் புறம் பூமி உள்ளாய் நின்று

மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல்வேங்கடத்து உள்நின்ற
அழகிப் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படித் தழுவ நின்று என்னைத்ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே’’
மழையே மழையே !’’ சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் மேற்புறத்தில் மண்ணைப்பூசி உள்ளே மெழுகினை ஊற்றுவது போல், திருவேங்கடத்தில் எழுந்தருளியுள்ள அழகர் பிரான் என்னுடைய உள்ளத்தில் ஊற்றாகி உட்புகுதல் வேண்டும். அங்கு நான் அணைத்து மகிழும் வண்ணம் தங்கி, என்னுடன் இணையும் வகை செய்து அருள்புரிந்து மழை பொழிய வில்லையோ? என்று கதறி, பித்தாகிப்பாடுகிறாள், இதே போல் கடலைப் பார்த்து,

‘‘கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்கு- உறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்துவதற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்துகின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே?’’ என்று பாடுகிறாள்.

கடலே, உன்னைக் கடைந்து கலக்கி சாரமான அமுதத்தை வெளிக் கொண்டுவந்தது போல், அந்த வேங்கடவன் என் உடலிலும் புகுந்து நீக்கமற நிறைந்து என் நலன்களையும் உண்டான் என்று கடலிடம் தன்னைக் காணவராத கண்ணனைக் குறை கூறுவதாகப் பாடியுள்ளாள் கோதை.

திருப்பாவை பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.