சென்னை, ஜன.6: நல் ஆளுமை திறனுக்கான பட்டியலில் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடத்தைப் பெற்று மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த செயல்திறனில் இந்தியா டுடே-ன் விருதையும் இரண்டாவது ஆண்டாக பெற்றிருக்கிறது. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த பெருமைக்குரிய சாதனைகளுக்காக முதலமைச்சரை பாராட்டுகிறேன் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையில் புகழ்ந்துரைத்தார்.

கவர்னர் உரையின் போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான இந்த அரசு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் உறுதியோடு பீடுநடை போட்டு வருகிறது. தமிழ்நாடு மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு, ஏழை, எளியோர் மற்றும் நலிவுற்றோர் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
நல் ஆளுமை நாளான 25.12.2019 அன்று, மத்திய அரசால் முதன் முறையாக வெளியிடப்பட்ட நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், நாட்டில் உளள் 18 பெரிய மாநிலங்களில், ஒட்டுமொத்தத் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. நாம் அனைவரும் பெருமைப்படத்தக்க சாதனையாகும்.

மேலும், ‘இந்தியா டுடே’ பத்திரிகை நவம்பர் 2019இல் ‘மாநிலங்களின் நிலை’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்விலும் ‘ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க மாநிலம்’ என்று தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த, மிகவும் பெருமைக்குரிய சாதனைகளுக்காக நான் முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலம் ஆக்க வேண்டும் என்ற,
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குறிக்கோளினை இந்த அரசு அடைந்துள்ளது என்றார்.