சென்னை, ஜன.6: திருமுல்லைவாயிலில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தாய், போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவரது கணவர் பிரபு. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலயில், இரண்டரை வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வியின் தாய் சுமதிக்கு (வயது 47) பிரபு நேற்று போன் செய்துள்ளார். செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பிரபு தெரிவிக்க ஆடிப்போன சுமதி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
தனது மகளின் சாவில் மர்ம உள்ளதாக சுமதி, போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து திருமுல்லைவாயில் போலீசில் அவர் அளித்த புகார் மனுவில், பிரபு சரிவர வேலைக்கு செல்லாததால் அவருக்கும் செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, 3 மாதங்களாக குழந்தையுடன் தன் வீட்டில்தான் தங்கியிருந்ததாகவும், கடந்த மாதம் தான், செல்வியை பிரபு அழைத்து சென்றதாகவும் சுமதி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.