– கௌசல்யா ஜவஹர் –

கோதையின் கிளி:

கோதை ஆசையுடன் ஒரு கிளியை வளர்த்து வந்தாள். அதற்கு ஓர் அழகான கூண்டு அமைத்து உண்பதற்கு பாலும், பழமும் அன்புடன் கொடுத்து வந்தாள். கிளிகளுக்கு நாம் பேசும் வார்த்தைகளை திரும்ப சொல்லும் வழக்கம் உண்டு. ஆண்டாள் தன் வீட்டுக்கிளியை எம்பெருமானின் பெயரான ‘கோவிந்தா’ என்று சொல்லும்படி பழக்கி வைத்திருந்தாள். கிளி தன் காதலன் பெயரை கொஞ்சும் மொழியில் கூப்பிடுவதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தாள்.

கார்காலம் வந்தும் கண்ணன் வராததால், ஆண்டாள் பிரிவுத்துயரால் துடித்தாள். எவையெல்லாம் மகிழ்ச்சியைத் தந்ததோ அவையெல்லாம் துக்கமாக மாறிவிட்டது. பெரும் துயரில் ஆழ்ந்திருந்த கோதைக்கு, இப்பொழுது கண்ணன் பெயரைக் கேட்டால் வேதனை இன்னும் அதிகமாயிற்று. அதனால் கூண்டிலிருந்த கிளி ‘‘கோவிந்தா’’ ‘‘கோவிந்தா’’ என்று கூவினால் அவளுக்கு எரிச்சலும், கோபமும் அதிகமாயிற்று. ஆண்டாளும் கிளியிடம் ‘ஏய் கிளியே! சும்மாயிரு’ என்று சொல்லிப் பார்த்தாள்.

இருந்தாலும் அதுவிடாமல் ‘‘கோவிந்தா’’ ‘‘கோவிந்தா’’ என்று தொடர்ந்து கூவிற்று. கோபம் அதிகமாகி கிளிக்கு உணவு கொடுப்பதை நிறுத்தி, அதைப் பட்டினி போட்டாள். நிலைமை மோசமாயிற்று, கிளி இப்பொழுது ‘‘கோவிந்தா’’ என்று தானே கூவக்கூடாது ‘‘உலகளந்தானே‘‘,‘‘உலகளந்தானே‘‘ என்று உரத்த குரலில் கூச்சல் போட்டது.

எம்பெருமானை ஆண்டாள் அன்புடனும், பெருமையுடனும் சொல்லும் பொழுது ‘‘உலகளந்தானே‘‘ என்று விளிப்பது வழக்கம். அப்பெயரைக் கொண்டு அந்த கோலக்கிளி தன்னை வெகுவாக பரிகாசிப்பதாக எண்ணி எரிச்சலுற்றாள் ஆண்டாள். ‘நான் உணவு அளிக்கவில்லை’ என்று அந்தத் திருமாலிடம் முறையிடுகிறதோ என் கிளி! இப்படிக் கூவி என்னை மேலும் வேதனைப்படுத்துகிறதே என்று புலம்புகிறாள் ஆண்டாள்.

‘‘கூட்டிலிருந்து கிளி எப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்
ஊட்டக்கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்’’

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளுக்கு இன்றும் இந்த கிளி சம்பந்தம் தொடர்கிறது. நித்தமும், அழகிய இலைகளால் ஒரு கிளி உருவாக்கப்படுகிறது. இதனை செய்வதற்கு பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அழகிய கிளியை, ஆண்டாளின் தோள்களில் சாற்றுவது வழக்கம், கிளி ஆண்டாளின் உற்ற தோழியாகவே கருதப்படுகிறது. கோவிலிலிருந்து மறுநாள் காலை இந்த கிளியை பிரசாதமாகப் பெற பலத்த போட்டி இன்றும் உண்டு.

திருப்பாவை பாசுரம் 22

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்