புதுடெல்லி, ஜன.7: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதி ஏழைகளுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை மாநிலங்களில் அமல்படுத்த அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

இதனால் பிற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதாகவும், மொத்த ஒதுக்கீடு ஐம்பது சதவீதத்தை தாண்டுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மற்றும் சமத்துவத்திற்கான தொண்டு நிறுவனம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த சட்ட திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ஏற்கனவே வாதிடப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினர். இதை அடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் விளக்கத்தை தாக்கல் செய்தார்.

அதில் பத்து சதவீத இட ஒதுக்கீட்டை அமலாக்குவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய கல்வி நிறுவனங்கள் அமல் படுத்தின. இதற்கான நிதி உதவியை மத்திய அரசே வழங்கியது குறிப்பிடத்தக்கது.