சென்னை, ஜன.7: தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்தது மறக்கவே முடியாதது என்றும், இதில் சமூகத்திற்கு முக்கியமான விசயம் உள்ளது என்றும் நடிகை நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.
ஏ,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடித்துள்ள நடிகை நிவேதா தாமஸ் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன், பள்ளி கல்லூரி படிப்பை இங்குதான் முடித்தேன். அப்போது போராளி, நவீன சரஸ்வதி சபதம், உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஜித்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான பாபநாசம் படத்தில் அவரின் மகளாக நடித்தேன். அது எனக்கு திருப்புமுனையை தந்தது. அதன் பின்னர் தெலுங்கில் நானி, ஜூனியர் என்டிஆர் உட்பட பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். கடந்த ஆண்டு தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. உடனே ஒப்புக்கொண்டேன்.

ரஜினி மகளாக நடித்தது என்னுடைய அதிஷ்டம். முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்தே பல ஆண்டுகள் பழகியவர் போல ரஜினி என்னுடன் பழகினார். அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதால் என்னையும் ஒரு மகளாகவே கவனித்து கொண்டார்.

70 வயது மனிதர் தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்வார். உணவில் கடுமையான கட்டுப்பாடு உடன் இருப்பார். தான் நடித்த காட்சி நன்றாக வரவேண்டும் என்பதில் கடுமையாக முயற்சி செய்வார். மும்பையில் படப்பிடிப்பின் போது எவ்வளவு பேர் வந்தாலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார். எந்த பாதுகாவலரும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பேசுவார்.
படத்தில் ரஜினிக்கு நான் மகள். அம்மா யார் என்பது சஸ்பென்ஸ், நயன்தாராவுக்கு நல்ல ரோல் இருக்குது.

இன்றைக்கு நாட்டுக்குத்தேவையான முக்கியமான விசயங்களும் படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு நிவேதா கூறியுள்ளார்.