டெல்லி, ஜன.7: நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

கடந்த 2012-ல் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கு கீழ் இருந்ததால் அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த தண்டனை முடிந்து அவன் கடந்த 2015-ல் விடுதலையானான்.

மீதமுள்ள குற்றவாளிகளான மீதமுள்ள முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் ஆகிய 4 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது

இதில் அக்‌ஷய் குமார் தவிர மற்ற 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்குதண்டனையை வரும் 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.