– கௌசல்யா ஜவஹர் –

சிலிர்த்தெழுந்த சிங்கம்

காதல் வலையில் கட்டுண்டிருந்த ஆண்டாள், தன் மன்னன் கண்ணனை பலவிதமாக போற்றி பாராட்டினாள். அவன் நினைவிலேயே ஒவ்வொரு நொடிப்பொழுதையும் செலவிட்டாள். திருப்பாவையில் 23 ஆம் பாடலில் கண்ணனை கம்பீரமான சிங்கமாக கற்பனை செய்து கொண்டு ஒரு அற்புத பாடலை பாடியுள்ளாள். அப்பாடலின் பொருளைக் காண்கையில், கோதை கண்ணனை துயிலெழுப்புகிறாள். தனக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டும்போது, கண்ணன் எழுந்துவருவதை சிங்கம் எழுந்து வருவதற்கு ஒப்பிடுகிறாள்.

‘மழைக்காலத்தில் மலைக்குகையில் படுத்துறங்கும் வீரம் மிகுந்த சிங்கம், தூக்கம் கலைந்து எழுந்து. தன் சிவந்த நெருப்புப் போன்ற கண்களைத் திறந்து, பிடரிமயிர் சிலிர்த்து, உடலை நான்கு பக்கங்களிலும் முறித்து, உதறிக் கொண்டு, நிமிர்ந்து கம்பீரமாக எழுந்து கர்ஜனை செய்து கொண்டு குகையின் வெளியில் வருவதாக ஓர் அற்புத காட்சியை வர்ணிக்கிறாள். இப்படி புறப்பட்டு வரும் கண்ணா, நீ அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து, நாங்கள் எந்த காரியத்தை முன்னிட்டு உன்னை காண வந்துள்ளோம் என்பதை ஆராய்ந்து, அறிந்து அருள் புரிய வேண்டும் என்று கோதை நாச்சியார் கோரிக்கை வைக்கிறாள். தந்தை பெரியாழ்வார் மூலம் அவதாரக்கதைகளைக் கேட்டு வளர்ந்தமையால் ஆண்டாள் நரசிம்மாவதாரத்தை நினைவு கூர்ந்து இப்பாடலைப் பாடியிருப்பாள் என்பது வைணவ பெரியோர்கள் கருத்து. இது ‘சிங்கப் பாட்டு‘ என்றே பலரால் அழைக்கப்படுகிறது.

காதல் மிகுதியால், ஆண்டாள் கண்ணனின் நடையை காளை நடை, யானையின் நடை, ஒரு அரசனின் நடை என்று கூறி மகிழ்ந்தாள். சிங்க நடை என்றும் கூறி மகிழ்கிறாள். காளையின் நடையில் உள்ள செருக்கு, யானையின் நடையில் உள்ள திமிர்ப்பு, சிங்கநடையில் உள்ள அழகு இவை அனைத்தையும் கண்ணன் நடையிலே கண்டு களிக்கிறாள் கோதை. கோதையின் காதல் நயம் ஓர் அற்புதக் காவியம்.

திருப்பாவை பாசுரம் 23

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளி, கோப்புடைய

சீரிய சிங்காசனத்து இருந்து, யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்