துபாய், ஜன.8: ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் இன்று 15-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், அமெரிக்கா தரப்பில் 80 பேர் உயிரிழந்து இருப்பதாக ஈராக் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரான் போர்ப்படை தளபதி காசிம் சுலைமானி கடந்த 3-ம் தேதி அமெரிக்க விமான குண்டுவீச்சில் உயிரிழந்தார். இதற்கு, ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

பழிக்குப்பழி வாங்குவோம் என்று அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் அயோதுல்லா அலி கோமேனி அறிவித்திருந்தார். இதனையடுத்து, இரு நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துவந்தது.

இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர ராணுவ படை இன்று காலை ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் முகாம்களை குறிவைத்து சுமார் 15 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை அமெரிக்காவின் பென்டகான் ஒப்புக்கொண்டது. சேதங்களை மதிப்பீடு செய்துவருவதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், 80 அமெரிக்க தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர் என அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கம் என்றும், ராணுவத்தினரை தீவிரவாதிகள் என்றும் அறிவித்து ஈரான் நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஈரான் மீது அடுத்த நடவடிக்கை எடுப்பது பற்றிய உக்தியை நாளை அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஈரானின் தாக்குதலுக்கு பிறகு, டிரம்ப் இன்று வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ஈரானின் ஏவுகணை தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டதுதான், நாங்கள் பொருத்தமான முறையில் பதில் நடவடிக்கை எடுப்போம். இதுவரை எல்லாம் நன்றாகவே இருக்கிறது. எங்கள் ராணுவம் சக்தி மிக்கது. உலகில் வேறு எந்த ராணுவத்தை விடவும் அதிநவீனமிக்கது. நாளை முக்கிய அறிக்கை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 2 படைத்தளங்கள் சேதமடைந்து இருப்பதை அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. உயிர்சேதம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.