டெஹ்ரான், ஜன.8: ஈரானில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

ஈரான் – அமெரிக்க நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று காலை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டின் போயிங் 730 பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 176 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் தலைகீழாக விழுந்து நொறுங்கி தீப்பிழம்பாக எரிந்தது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக உக்ரைன் அரசு அதிகாரி கூறினார். பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டதால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை என்றும், விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டர், 22 ஆம்புலன்ஸ், 4 பஸ் ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்றன. ஆனால் யாரையும் மீட்க முடியவில்லை.
இந்நிலையில், அந்த விமானம் ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறி உள்ளது. இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரேசா ஜாபர்சாதே, அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 176 என்று கூறினார்.