இதயத்திற்கு மீன் மிகவும் நல்லது: ஜெயக்குமார் பரிந்துரை

அரசியல் சென்னை

மீன்கள் அதிகமாக சாப்பிடுவதால் இதயம், கண், தோல், புற்றுநோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் வராது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தின் போது பேசிய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் நவீன மீன்வகைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் நவீன ரக மீன்வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், உலகத்தில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது எனவும் மீன் சாப்பிட்டால் இதய அடைப்பு, தோல் சார்ந்த நோய்கள், கண் சார்ந்த பிரச்னைகள், புற்றுநோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் வராது எனவும் தெரிவித்தார்.

மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் எனவும் தான் கூட 55 வயதில் தான் கண்ணாடி போட்டேன் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் எனவும் மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.