இந்தூர், ஜன.9:  இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா விலகி உள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தூரில் நடந்த 2வது போட்டியில் இந்தியா சுலப வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3-வது மற்றும் கடைசி போட்டி புனேயில் நாளை நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா விலகி உள்ளார். இந்தூரில் நடந்த 2வது போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது இவரது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக பெவிலியன் திரும்பிய இவர், மீண்டும் களமிறங்கவில்லை.

இது குறித்து இலங்கை அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், இசுரு உதானா அதிக வலியுடன் காணப்பட்டார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 3-வது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார். காயம் குணமடையும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு (விண்டீசுக்கு) எதிரான தொடரில் அவர் களமிறக்கப்படுவார், என்றார்.