– கௌசல்யா ஜவஹர் –

பக்திக்குப் பலவகை இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பக்தனை பகவானிடம் சேர்க்கும் சாதனங்கள். பக்தி மட்டுமே செய்து மாமன்னன் பட்டம் பெற்ற பிரகலாதன் பாகவத புராணத்தில் நவவிதபக்தி என்ற ஒன்பது விதமான பக்தி பற்றியும் அதை எப்படிச் செய்யலாம் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறான். இந்த ஒன்பது நிலைபக்தி பாவமும் ஆண்டாளின் பாசுரங்களில் பளிச்சிடுவதைக்காண முடிகிறது. இதில் கவனிக்க வேண்டியது, ஆண்டாள் இந்த நவவித பக்திகளையும் எடுத்துரைக்கும் நோக்கத்திற்காக பாசுரங்கள் பாடவில்லை. ஆனால், பக்தி மேலிட்டால் இந்த பாவங்கள் தாமாகவே வெளிப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். ஏனெனில், பக்தியே அப்பாசுரங்களின் உயிரோட்டம் ஆகும்.

ஸ்ரவணம்

ஸ்ரவணம் என்றால் காதால் கேட்பது. இறைவனது பெருமைகளையும், புகழையும், லீலைகளையும், திருக்கல்யாண குணங்களையும், வைபவங்களையும் கேட்பதில் அடங்கா ஆவல் கொள்ளுதல் ஸ்ரவண பக்தியாகும். இதனை ஆண்டாள்,

‘மெள்ள எழுந்த அரி என்ற பேர் அரவம்’

‘விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே’

உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்’

என்ற பாடல் வரிகள் மூலம் ‘அரி’ என்ற பெயரைச் சொல்லக் கேட்கும் ஆனந்தம், சந்தோஷம் எப்படி உள்ளம் புகுந்து குளிர்விக்கிறது என்பதை ஆண்டாள் வெளிப்படுத்துகிறாள்.

கீர்த்தனம்

நாம குணலீலைகளை இசையோடு பாடி அதில் ஈடுபடுதல் கீர்த்தனா பக்தியாகும். ஆண்டாளின் பல பாசுரங்களில் இந்த கீர்த்தனா பக்தி பாவம் வெளிப்படுகிறது.

‘ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி’

‘மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம¢ பலவும் நவின்று’

‘கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி¢போய்’

‘பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி’

‘மலர் தூவித் தொழுது வாயினால் பாடி’

‘முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட’

‘பங்கயக் கண்ணனைப் பாட’

‘கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு’

அன்றி இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி

என்று தொடங்கும் திருப்பாவை 24 ஆம் பாசுரம் முழுவதிலும் எம்பெருமானின் புகழை, பெருமைகளை ஆண்டாள் எடுத்துரைத்து மகிழ்கிறாள். இவை மட்டுமல்லாமல், நாச்சியார் திருமொழியிலும் எம்பெருமானின் வீரத்தையும், சிறப்பையும், கல்யாண குணங்களையும் ஆண்டாள் அருளியுள்ளாள்.

திருப்பாவை பாசுரம் 24

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி

கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி

குன்று குடையா வெடுத்தாய்! குணம்போற்றி

வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்