– கௌசல்யா ஜவஹர் –

பக்தியும், பக்தி பாவங்களும் பல உண்டு. இதில் ஒன்பது வித பக்தி பற்றி பிரகலாதன் பாகவதத்தில் எடுத்துக் கூறியுள்ளான். இது மிகப்பிரபலம். ஆண்டாள் பாசுரங்களில் இந்த ஒன்பது வித பக்தியும் அழகாக அமைந்துள்ளன. இதில் முதல் இரண்டு பாவங்களான ஸ்ரவணம் மற்றும் கீர்த்தனம் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. இனி மூன்றாவது பக்தி பாவத்திலிருந்து தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்மரணம்

ஸ்மரணம் என்பது மனதில் எப்பொழுதும் இடையறாது இறைவனின் நாமத்தையே சிந்தித்துக் கொண்டிருத்தல், அவன் புகழை, கல்யாண குணங்களை எண்ணிக் கொண்டிருத்தல் ஸ்மரண பக்தியாகும். இதனை ஆண்டாள்,

‘கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி’

‘கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி’

‘வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க’ என்று வெளிப்படுத்தியுள்ளாள்.

பாதசேவனம்

பாதசேவனம் என்பது கால்பிடித்து விடுதல். இதனைப் பேறாகப் பெற்றவர்கள் பெரிய பிராட்டியும், பூமி பிராட்டியும் ஆவர். ஆண்டாள் இப்பாதசேவையை விரும்பிப் பாடியதை,

‘ கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்

என்னும் இப்பேறு எனக்கு அருள், கண்டாய்’

‘கோவிந்தற்கு ஓர் குற்றேவல்’

‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’

என்னும் பாசுரப் பகுதியில் அறியலாம். இந்தப் பேற்றையே வைணவ சித்தாந்தத்தில் ஆன்மாவுக்கு புருஷார்த்தம் என்று சொல்லப்படுகிறது.

அர்ச்சனம்

இது பூஜை செய்யும் பக்தி. எம்பெருமானின் திருப்பெயர்களைச் சொல்லி அவன் புகழ்பாடி, போற்றிப் பலவாறு துதித்தல் ஆகும். திருப்பாவை முழுவதிலும் இந்த அர்ச்சனை பக்தியைக் காணலாம்.

‘‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை.. தாமோதரனை’’

என்று கண்ணனைப் பல பெயர்களால் விளித்து அவனை கோதை வழிபடுகிறாள்.

வந்தனம்

எம்பெருமானை விழுந்து வணங்குதல், வணக்கம் செலுத்துதல் வந்தனம் எனப்படும்

‘‘சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து’’,

‘‘செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்

என்று எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கி விண்ணப்பம் செய்கிறாள் ஆண்டாள்.

தாஸ்யம்

தன்னை அடிமையாகவும், இறைவனை ஆண்டானாகவும் கருதி, பக்தி செய்தல் தாஸ்யம் எனப்படும்,

‘‘எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’’

என்று பாடி தன்னுடைய தாஸ்ய பக்தியை வெளிப்படுத்துகிறாள் கோதை.

சாக்யம்

சாக்யம் என்பது தோழமை கொள்ளுதல், சகாவாகப் பறிமாறுதல்,

‘‘என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்’’

என்ற நாச்சியார் திருமொழிப் பாடலில் எம்பெருமானைத் தோழனாக்கி விளையாடுதலை விவரித்துள்ளாள் ஆண்டாள்,

ஆத்ம நிவேதனம்

தன்னையே இறைவனுக்கு அர்ப்பணிப்பது ஆத்ம நிவேதன பக்தியாகும்.

‘‘சிற்றஞ்சிறுகாலே…… மாற்று ஏலோர் எம்பாவாய்…..’’

‘‘நான்மறையின் சொற் பொருளாய் நின்றார் என் மெய்பொருளும் கொண்டாரே’’ என்ற பாடல் வரிகள் மூலம் என் ஆன்மா, ஆத்மீயங்கள் இரண்டையும் கொண்ட எம்பெருமானுக்கே அந்த இரண்டும் சொந்தம் என்று தன்னை அர்ப்பணித்துப் பாடியுள்ளாள் ஆண்டாள்.

திருப்பாவை பாசுரம் 26
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்