– கௌசல்யா ஜவஹர் –

வைணவத்தில் சரணாகதி தத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கான வழி. வைணவத்தில் ஜீவாத்மா (உயிர்) பரமாத்மா (கடவுள்) இரண்டிற்கும் அழிவில்லை; ஜீவாத்மாவில் அழிவது உடலே, அதற்குள் உறையும் ஆத்மா அல்ல. ஜீவனின் செயல்களே மறுபிறப்புச் சுழற்சியில் சிக்க வைக்கிறது. இந்த சுழற்சி வலையிலிருந்து மீள இராமானுஜர் எளிய வழியாக சரணாகதி தத்துவத்தை எடுத்துரைத்தார். அந்த தத்துவங்கள் யாவும் ஆண்டாள் அருளியுள்ள திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் புதைந்துள்ளன. இந்த சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் உண்டு. அவை (1) அனுகூல்ய சங்கல்பம் (2) பிரதி கூல்ய வர்ஜனம் (3) ஆகிஞ்சன்யம் (4) கோப்திருத்வ வரணம் (5) மகாவிஸ்வாசம். இவை ஐந்தையும் திருப்பாவையில் காணலாம்.

1) அனுகூல்ய சங்கல்பம் – எம்பெருமான் மனதிற்கு விருப்பமானவையே செய்தல்

இதனை ஆண்டாள், ‘நாட்காலே நீராடி’, ‘தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது’, ‘நாமம் பலவும் நவின்று’, ‘வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க’ என எடுத்துக் காட்டுகிறாள்.

2) பிரதி கூல்ய வர்ஜனம் – எம்பெருமானுக்குப் பிடிக்காததை செய்யாமை

இதனை ‘செய்யாதன செய்யோம்’, ‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்ற வாக்கால் எடுத்துக்கூறுகிறாள். அதாவது, மனதால் விட வேண்டியதையும், வாக்கால் விட வேண்டியதையும் கூறுகிறாள். தீக்குறள்- பொல்லாததை அல்லது வம்பு பேசுதல், கோள் சொல்லுதலைக் குறிக்கும்.

3) கார்ப்பண்யம் – எம்பெருமானே ஒரே வழி என உணர்தல்

கர்ம, ஞான யோகங்கள் கடைபிடிக்க முடியாது. என்னிடம் உன்னை அடைய உன்னைத்தவிர வேறுவழி இல்லை என்று உணர்தல். இதனை ஆண்டாள், ‘‘கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்’ என்ற பாசுரம் மூலம் கர்மயோகம் செய்ய இயலாமையைச் சொல்லி, ‘அறிவு ஒன்றும் இல்லாத’ என்ற பதத்தின் மூலம் ஞானயோகம், பக்தியோகம் முதலியவை கடைபிடிக்க இயலாததைச் சொல்லி, ‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது‘ என்பதன் மூலம் எந்த வழியும் இல்லாமல், நிர்க்கதியான எங்களை நீ நிச்சயம் ஆட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறாள்.

4) கோப்திருத்வ வரணம் – எம்பெருமானே காப்பவன் என உணர்ந்து வேண்டுதல்

எம்பெருமானே காப்பவன் என்று உணர்ந்து விண்ணப்பித்தல். இதனை ஆண்டாள் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’, ‘இறைவா!, நீ தாராய் பறை’ என்று வெளிப்படுத்தியுள்ளாள். இங்கு ‘பறை’ என்ற பதத்திற்கு ‘அருள்’ என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது இங்கு கைங்கர்யத்தை அருளாகக் கேட்கிறாள் ஆண்டாள்.

5) மஹாவிஸ்வாசம்- எம்பெருமான் உறுதியாக காப்பான் என்ற எண்ணம்

இதனை ஆண்டாள் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறாள். இங்கு ‘நமக்கே’ என்ற பதம் முழு உறுதியாக அருள்வான் என்ற மஹாவிஸ்வாசத்தைக் காட்டுகிறது. இவ்வாறாக, சரணாகதியின் அனைத்து அங்கங்களையும் ஆண்டாளின் திருப்பாவை எடுத்துரைப்பாதால், இதனைச் ‘சரணாகதி பிரபந்தம்’ என்றும் அழைப்பதுண்டு.

 

திருப்பாவை பாசுரம் 27

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்

நாடு புகளும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

திருப்பாவை பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்