சென்னை, ஜன.11: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரான்ஸ், துபாயில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். மும்பையில் ரசிகர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி வெளியானது.

உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான தர்பார் படத்திற்கு ரசிகர்களிம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து முதல் நாள் அன்று உலகம் முழுவதும் ரூ.119 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 2-ம் நாளான நேற்றும் மேலும் ரூ.100 கோடியை வருவாயாக ஈட்டி உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தர்பார் படத்தை கண்டு களித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. துபாயில் ஒரு காட்சி ஓடிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு காட்சிக்கு அதைவிட இரு மடங்கு ரசிகர்கள் வெளியில் காத்திருந்து படம் பார்த்தனர். மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் தர்பார் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.