சென்னை, ஜன.11: ‘எலி’ பட தயாரிப்பாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து தான் தலைமறைவாக இருப்பதாக வெளி வந்த செய்தியை பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மறுத்திருக்கிறார்.
நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை தயாரித்த சதீஷ்குமார் தனக்கு அந்த படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே நான் பட நிறுவனம் தொடங்கினேன்.

அவர் நடித்த எலி படத்தினால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக இரு படங்களில் நடித்து தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறி அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்’ என்றார்.

இதுகுறித்து சதீஷ்குமாரின் மேனேஜர் கோவிந்தராஜ் மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாதை போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வடிவேலுவை போலீஸ் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் பரவின.

இதனை நடிகர் வடிவேலு மறுத்துள்ளார். என்னை களங்கப்படுத்தவும், எதிர்காலத்தை வீணாக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் தலைமறைவாகவில்லை. நான் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இருந்தேன். இப்போது தான் திரும்பியிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததற்காக புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.