– கௌசல்யா ஜவஹர் –

ஆண்டாள் சுயம்வரம்

ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார், மகளின் மனம் கண்ணனையே வட்டமிடுகிறது என்பதை நன்கு அறிந்தவர். ஆண்டாளும் தந்தையிடம் ‘சங்கேந்தும் மாதவனையன்றி மானிடர்க்கு மாலையிடேன்’ என்று திட்டவட்டமாகக் கூறினாள். அவள் வழிக்கு அவர் வந்தார். அவ்வாறாயின், 108 திருப்பதி எம்பெருமான்களில் யாருக்கு வாழ்க்கைப் படப்போகிறாய் என்று வினவினார். பின்னர் பெரியாழ்வார் 108 எம்பெருமான்களின் திருக்கல்யாண குணங்களையும், சிறப்புகளையும் வடிவழைகையும் வர்ணித்து கூறி, ஓர் அற்புத சுயம்வரத்தை நடத்தினார். அவ்வழியில் அரங்கநாதன் பற்றி பெரியாழ்வார் கூற, ஆண்டாள் அவனே என் மணாளன் என்றாள்.

அரங்கன் எப்படி வந்து மணப்பான்

பெரியாழ்வாருக்குப் பெரும் கவலை. அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) அனைவரும் வணங்கும் தெய்வமாக வீற்றிருக்கும் தெய்வமாய் இருப்பவன் அரங்கன். அவன் எப்படி இவளை மணப்பான், ‘திருவரங்கத்து எம்பெருமானே பிடிவாதமாக இருக்கும் என் மகள் கதி என்ன?’ என்று கதறிப் புலம்பினார். அன்றிரவே பெரியாழ்வார் கனவில், எம்பெருமான் தோன்றி ‘‘ஆழ்வீர்’’ உமது மகள் கோதையைத் திருவரங்கத்துப் பெரிய கோயிலுக்கு அழைத்து வாரும், அவளை நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி மறைந்தார். அதே போல் அரங்கன் திருவரங்க கோயில் பரிசனங்கள் கனவிலும் தோன்றி, ‘‘நீங்கள் மேள தாளத்துடன் குடை, கவரி, சீர்வரிசைகளுடன் இரத்தினப் பல்லக்குடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று விஷ்ணு சித்தரையும் (பெரியாழ்வார்) அவரது மகளையும் அழைத்து வர வேண்டும்’’ என்று கட்டளையிட்டார்.

பெரியாழ்வார் மகளிடம் இந்த நற்செய்தியைச் சொல்ல, கோதை தன்னை மணமகள் போல் அலங்கரித்துக் கொண்டாள். விரைவில் பெரும் பரிவாரத்துடன் இரத்தினப் பல்லக்கு வர அதில் ஏறித் திருவரங்கம் சென்றனர்.

தென்பாண்டிக்கோன் இச்செய்தி அறிந்து விரைந்து அரங்கம் வந்தார். திருவரங்கக் கோயில் வாசலில் பல்லக்கு நின்றது. அழகு பதுமையாய் சர்வாலங்கார பூஷிதையாய் ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கினாள், எங்கு திரும்பினாலும் தோரணங்கள், மலர்ப் பந்தல்கள், பாளை, கமுகு பரிசுடைப் பந்தல், கதிரொளி தீபம், கலசம் ஏந்திய இளம் மங்கையர் பூரணப் பொற்குடம் வைத்து எதிர்கொண்டு அழைத்தனர்.

ஆண்டாளின் மனக்கண்முன்னே மாயக்கண்ணன் வாரணமாயிரம் சூழ அங்கு வலம் வந்தான், தேவாதி தேவர்களுடன் கோளரி மாதவனாய் இளம் காளையாய் அவள் முன் தோன்றி அந்த அரவிந்தச் செவ்வரியோடும் கண்களால் உற்று நோக்கி கண் சிமிட்டினான்.

பூமாலையைக் கையில் ஏந்திப் பாமாலையை மனதில் பாடி அரங்கன் சன்னதி நோக்கி பெரியாழ்வாருடன் சென்றாள். அரங்கன் சந்நிதியில், பெருமானின் திருவழகைக் கண்டு நாணத்தால் முகம் சிவக்க நாயகனைப் பார்த்தாள். ஆண்டாளுக்கு அரங்கன் ‘‘அருகில் வா’’ என்ற அழைப்புக் கேட்க, சட்டென ஆனந்தக் கடலில் ஆழ்ந்து, திருவரங்கத்து திருவடி வருடக்கருதி நாக ஆதிசேஷனின் மீது கால் பதித்து ஏறி, நம் பெருமானது திருமேனியிலேயே ஒளிப்பிழம்பாய் ஒன்றாய்க் கலந்து என்றும் பிரியாதிருப்பவள் ஆனாள் ஆண்டாள்.

இலட்சியம் நிறைவேறியது

ஆண்டாள் காதலின் இலட்சிய இலக்கு எம்பெருமானை அடைவது, அதாவது (தான்) ஜீவாத்மா, பரமாத்மாவோடு கலக்க வேண்டுமென்பதே. அரங்கனுக்கு ஆட்பட்டு என்றென்றும் அடிமை செய்வதே ஆண்டாள் திருக்கல்யாணத்தின் இலட்சியம், ஏன் இலட்சணம் என்றும் மரபு வழிச்சான்றோர் கூறி வருகின்றனர். இதற்கு கோதை அமைத்துக் கொண்ட பாதை காதல் பாதை. இது ஜீவன் பரமனை அடையக் கோதில்லாக் கோதை காட்டிய பாதை பக்தி கலந்த அன்புப் பாதை.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் போகிப்பண்டிகை அன்றே ஆண்டாள் கல்யாண வைபவ விழா நடப்பது வழக்கம். இன்றும் வைணவ இல்லங்களில் போகிப் பண்டிகை கோதைத் திருமண விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

திருப்பாவை பாசுரம் 30

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி

அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்

செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்