சென்னை, ஜன.14: மதுரையில் சட்டவிரோதமாக லோக்கல் கேபிள் டிவியில் தர்பார் படத்தை ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரூ.300 கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளம் மற்றும் இணைய தளத்தில் தர்பார் படம் திருட்டு தனமாக வெளியிடப்பட்டது. இதை உடனே தடுக்க வலியுறுத்தி லைகா நிறுவனம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வேலையில், ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்யும் விதமாக மதுரை மாவட்டத்தில் சரண்யா என்ற லோக்கல் கேபிள் டிவியில் தர்பார் படம் நேற்று திரையிடப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும் ரசிகர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். உடனடியாக மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். .

சட்டவிரோதமாக கேபிளில் ஒளிபரப்பப்பட்ட தர்பார் படம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி லைகா நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட சரண்யா கேபிள் டிவி உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.