சென்னை, ஜன.16:  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் கவுகாத்தி அணியுடனான இன்றைய லீக் போட்டியிலும் சென்னை அணி வெற்றிபெற்று தனது வெற்றி பயணத்தை தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை, கவுகாத்தி அணி எதிர்கொள்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் புது நம்பிக்கை தந்துள்ளது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி, 5 தோல்வி உட்பட 12 புள்ளிகளுடன் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. அதேசமயம், கவுகாத்தி அணி 10 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று முன்னேற்றம் காணவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இரு அணிகளும் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல்பாதி முடிவில் ஒடிசா 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், ஒடிசா அணி 2-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.