சென்னை, ஜன.17: தமிழ்நாட்டில், இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உற்றார், உறவினர்களை சந்திக்கவும், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரள்வார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பொருட்காட்சி திடல் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் காலையிலேயே கூட்டம் அலைமோதியது.

பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் நிறைவுப் பகுதியான காணும் பொங்கல் இன்று கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஒன்றுகூடல் என்பதன் அடிப்படையில் நடைபெறும் காணும் பொங்கலையொட்டி, கடற்கரை, நதிக்கரைகள், அணைக்கட்டுகள், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் இன்று அலைமோதும்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் மெரீனா, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, குற்றாலம், உதகை , கன்னியாகுமரி போன்ற இடங்களில் காணும் பொங்கலைக் கொண்டாட குடும்பத்துடன் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர். காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில், அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், பாரிமுனை, தாம்பரம், திருவான்மியூர், முட்டுக்காடு, கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் சுமார் 10 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் கடல் நீரில் இறங்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளிலும், தீவுத்திடல் பொருட்காட்சியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை அறிவுறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக மெரீனா உள்ளிட்ட பொழுது இடங்களில் மக்கள் வருகை தந்ததை காண முடிந்தது. சில குடும்பத்தினர் மாட்டு வண்டியில் வருகை தந்தனர். சென்னை மட்டுமில்லாது புறநகர் பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் மெரீனா, பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் குவிந்திருந்தனர். வண்டலூர் உயிரியியல் பூங்காவில் நீலமான் இணை சமீபத்தில் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தற்சமயம் பூங்காவில் 11 நீலமான்கள் உள்ளன. பூங்காவில் இந்திய பழுப்பு நிற ஓநாயும் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. கீர்த்தி மற்றும் வசந்தன் இணை ஓநாய்கள் சமீபத்தில் 4 ஆண் மற்றும் 3 பெண் குட்டிகளை என மொத்தம் 7 குட்டிகளை ஈன்றது.
இந்த இணை இத்துடன் 3-வது முறையாக குட்டிகளை வெற்றிகரமாக ஈன்றுள்ளது. புதிதாக பிறந்துள்ள குட்டிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

காணும் பொங்கல்நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் பார்வையாளர்களை மகிழ்விக்க பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் பிறந்த குட்டிகளை பெரிய எல்.இ.டி. திரையில் காட்சிபடுத்துதல் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.