ஐதராபாத், ஜன.17: ஆந்திரா மாநிலத்தில் கோழிச்சண்டையின் போது ஒரு கோழியின் உரிமையாளர் கழுத்தில் கத்தி பாய்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய பெயர் வெங்கடேஸ்வர ராவ். ஆந்திரா மாநிலம் சிந்தாலப்புடி மண்டலில் உள்ள பிரகலாதவரம் என்ற இடத்தை சேர்ந்தவர். இவர் கோழிச்சண்டை போட்டியில் தனது கோழியுடன் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இடைவேளையில் தனது கோழியை தூக்கி நெஞ்சருகே பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கோழி அவர் பிடியிலிருந்து தப்பி பறக்க முயன்றது. ஆனால் கோழி தப்பவிடாமல் இருப்பதற்காக அதனை இறுகப்பிடித்த போது கோழியின் காலில் கட்டியிருந்த கத்தி அவரது கழுத்தை வெட்டியது. இதனால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு அடித்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.