புதுடெல்லி, ஜன,17: நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறையின் பரிந்துரையின் படி ஜனாதிபதி இன்று நிராகரித்தார். இதையடுத்து முகேஷ்சிங் உள்ளிட்ட 4 பேரும் 22-ந் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான்.

மீதமுள்ள முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7–ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடனடியாக நிராகரித்தார். இதையடுத்து முகேஷ் சிங் உள்ளிட்ட 4 பேரும் திகார் சிறையில் வரும் 22-ந் தேதி காலையில் தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திகார் சிறையில் 4 பேரும் 3-ம் எண் அறையில் வைக்கப்பட்டுள்ளனர்.