சென்னை, ஜன.17: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தாவுபிக் ஆகியோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புக்காக கொண்டுவரப்பட்ட உபா சட்டம் பாய்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இருவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிலை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக தேடப்பட்டுவந்த அப்துல் சமீம், தாவுபிக் ஆகியோரை கடந்த செவ்வாய்கிழமை கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரும் குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று தற்கொலைப்படை தாக்கல் நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புகொண்டுள்ளனர். மேலும் பிற போலீஸ் அதிகாரிகளை எச்சரிப்பதற்காகவே வில்சனை சுட்டுக் கொன்றதாகவும் கூறி உள்ளனர்.

இருவருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த இருவருடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கததின் ஆதரவாளரான காஜா மொய்தீனுடனும் இவர்களுக்கு தொடர்பு இருந்துள்ளது. காஜா மொய்தின் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் குமார் கொலையில் சம்பந்தப்பட்டவர். இவர் அல்ஹிந்த் அமைப்பை தொடங்கி ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வில்சன் கொலையில் கைதான இருவருக்கும் தீவிரவாத இயக்க்ததுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இருவர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களை தேசிய புலானய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். அதன்படி அப்துல் சுமீம், தாவுபிக் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.