புதுடெல்லி, ஜன.17: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் பிணைத் தொகையாக பெற்ற ரூ.20 கோடியை திருப்பிக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2007-ம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கட்டுப்பாட்டில் இருந்த அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

இதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் வர்த்தக நிறுவனத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பங்குகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்துக்கு பெரும் தொகை கமிஷனாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்த கார்த்தி சிதம்பரத்தை கடந்த ஆண்டு சிபிஐ கைதுசெய்தது. அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கேட்டார். அதற்கு ரூ.20 கோடியை பிணைத் தொகையாக வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

கடந்த ஜனவரியில் 10 கோடியும், மே மாதம் 10 கோடியும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணம் முடிவடைந்ததையொட்டி அந்த பணத்தை திருப்பிக் கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 17-ம் தேதி (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு அறிவித்திருந்தது.

அதன் படி இன்று காலை விசாரணை தொடங்கிய போது, கார்த்தி சிதம்பரத்திடம் பெற்ற ரூ.20 கோடியை திருப்பி கொடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.