கோவை, ஜன.17: தந்தை பெரியார் பற்றி அவதூறு மற்றும் வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி, திராவிடர் விடுதலைக்கழகத்தினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட மாநகர தலைவர் நேருதாஸ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 14-ம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் உருவங்கள் நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்க களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தகுந்த முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இதே போல் திருச்செங்கோடு போலீசிலும் திக அமைப்பாளர் தனலட்சுமி என்பவர் ரஜினி மீது புகார் செய்துள்ளார்,