ராஜ்கோட், ஜன.18:  சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளில் கவனம் செலுத்தாமல், ஓய்வறையில் நாங்கள் (அணியினர்) ஒன்றுக்கூடி முடிவெடுப்பதில் அதிக கவனத்துடன் இருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நேற்று நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், நாம் சமூக வலைதள காலத்தில் வாழ்கிறோம். இங்கு உடனுக்குடன் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. சிறந்த அணியை நாம் களமிறக்க வேண்டியுள்ளது, இந்த போட்டியில் ராகுலைப் பார்த்தீர்கள். ஒருவரை விரைவில் அப்படியெல்லாம் தீர்ப்பு எழுதி விட முடியாது. 5ம் நிலையில் இறங்கி இந்த மாதிரி ரன்களைக் குவித்துள்ளார், சர்வதேச மட்டத்தில் கே.எல்.ராகுலின் அபார இன்னிங்ஸ் இது என்றே நான் கூறுவேன். முதிர்ச்சியும் இருந்தது கிளாசும் இருந்தது.

ஓய்வறையில் நாங்கள் என்ன முடிவெடுக்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம், வெளியே ஏகப்பட்ட பதற்றங்கள், கருத்துக்கள், இவை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. 3-ம் நிலையில் இறங்கியது அணிக்கு நல்லதென்றால் எனக்கும் அதில் மகிழ்ச்சிதான். ஒருநாள் கிரிக்கெட்டில் தவணும், ரோஹித்தும் ரன்கள் குவித்தால் அது ஒட்டுமொத்த அணிக்கே நன்மையாகிறது. பவுலர்கள் மூவருமே யார்க்கர்களை பிரமாதமாக வீசினர், என்றார்.