பெற்றோர் பிறப்பிடம் கேள்வி கட்டாயமில்லை

இந்தியா

சென்னை, ஜன.18: என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பில் பெற்றோரின் பிறப்பிடத்தை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னோடியாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நாடுமுழுவதும் ஏப்.1-ல் தொடங்கி, செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது. இதற்கு பிஜேபி அல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்திற்காக கொண்டு வரப்பட்ட என்சிஆர் எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கான முன்னோடியே இது என்று சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநில தலைமை செயலாளர் டி.பி.குப்தா பேசுகையில், என்பிஆர் கணக்கெடுப்பின் போது பெற்றோரின் பிறப்பிடத்தை கேட்பது உள்ளிட்ட சில கேள்விகளை தவிர்க்க வேண்டும். இதனால் சர்ச்சைகள் ஏற்படும் என்றார்.

இதையடுத்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், என்டிஆர் கணக்கெடுப்பின் போது தகவலுக்காக சில கேள்விகள் கேட்கப்படும், உதாரணமாக பெற்றோரின் பிறப்பிடம் பற்றிய கேள்விக்கு விருப்பப்பட்டால் பதிலளிக்கலாம். இல்லை என்றால் விட்டு விடலாம் என்றார்.

மேலும், மத்திய அரசு அதிகாரி கூறுகையில், என்பிஆர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் ஆவணங்கள் எதையும், தாக்கல் செய்ய தேவையில்லை என்றார்.