கெஜ்ரிவாலை எதிர்த்து நிர்பயா தாய் போட்டியா?

இந்தியா

புதுடெல்லி, ஜன.18:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து நிர்பயா தாயார் ஆஷா தேவி போட்டியிட வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி செய்கிறது. இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இது குறித்து டெல்லி காங்கிரஸ் பிரச்சாரக் கமிட்டி தலைவர் கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டரில், “தாயே, நான் உங்களை வணங்குகிறேன். ஆஷா தேவியை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி ஆஷா தேவி கூறுகையில், என்னைப் பொறுத்தவரையில் எனது மகளுக்கு தீங்கு செய்த குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்.

அரசியலில் எந்தவித ஈடுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரிடமும் நான் பேசவில்லை. எனது மகளுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் கூறுகையில், தற்போது பரவி வரும் செய்திகள் உண்மை இல்லை. எனது குடும்பத்திற்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது என்றார்.

இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா தனது ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு அனைவரையும் வரவேற்கிறோம் என்று கூறி உள்ளார்.