புதுடெல்லி, ஜன.18: நிர்பயாவின் கொலையாளிகளின் ஒருவரான பவன்குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் புதிதாக மேல்முறையீடு செய்துள்ளதால் பிப்ரவரி 1-ல் தூக்கில் போடுவதில் தாமதம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சம்பவம் நடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சிறுவன் என்றும், அதனால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், தனது வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததுடன், தனக்கு ஆதரவாக வாதாடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளையும் ஜனவரி 22ம் தேதி தூக்கில் போடும்படி முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், முகேஷ் சிங் என்ற குற்றவாளி, கருணை மனு தாக்கல் செய்ததாலும், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி வழக்கு தொடர்ந்ததாலும் 22-ம் தேதி தண்டனையை நிறைவேற்றுவதில் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி அளித்த பேட்டியில், குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் தாமதம் ஏற்படுத்த கூடாது. பிப்ரவரி 1-ம் தேதி அல்ல அதற்கு முன் ஜனவரி 22-ம் தேதியே தூக்கிலிடப்பட வேண்டும் என்றார்.