புதுடெல்லி, ஜன.20: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் அங்குள்ள மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிலுவம்பாளையத்தில் உள்ள வயல்வெளிகளில் நின்றுகொண்டே பிரத்யேக பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்ததோடு, விவசாயம் தொடர்பான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.

இது குறித்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதன் மூலம் மக்களுக்கு ஊக்கம் தருகிறார். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.