சென்னை, ஜன.20: பெரியார் திராவிட கழகம் சார்பில் வரும் 23-ம் தேதி ரஜினி வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளன. இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் அனைவரும் போயஸ்கார்டன் முன்பு பாதுகாப்பு அரண் அமைக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் திராவிட கழக போராட்டம் பற்றி ரஜினி குறிப்பிட்டு பேசினார். அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், ரஜினி வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். வரும் 23-ம் தேதி காலை 10 மணி அளவில் போயஸ்கார்டன் இல்லம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 23-ம் தேதி அன்று போயஸ்கார்டன் இல்லம் முன்பு ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடி பாதுகாப்பு அரண் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தங்களை தாண்டி யாரும் உள்ளே வர முடியாது என்றும், தைரியம் இருந்தால் வந்துபாருங்கள் என்றும் அவர்கள் சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக வரும் 23-ம் தேதி அன்று போயஸ்கார்டன் பகுதியில், மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தெரிகிறது.