சென்னை, ஜன.20:

தனக்கெதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த அப்பீல் மனுவை திரும்பப் பெறுவதாக கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012- ம் ஆண்டு தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு, தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்பீல் மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு தலைமை நீதிபதி, அப்பீல் மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை திரும்பப்பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால், அபராதம் விதிக்கிறோம் என எச்சரித்தார்.எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவைதான்.

எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டுமென துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கிறோம். அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் தரப்பு கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம். எதிர்காலத்தில், மனுதாரர் இது போல செயல்படக் கூடாது என உத்தர விட்டனர்.