சென்னை, ஜன.21: 1971-ல் சேலத்தில் நடைபெற்ற தி.க. பேரணி குறித்து கற்பனையாக எதையும் நான் பேசவில்லை. பத்திரிகையில் வந்ததையும், கேள்விப்பட்டதையும் தான் பேசினேன். இதற்காக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறினார்.

கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன் விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது, 1971-ல் சேலத்தில் தி.க. சார்பில் நடைபெற்ற பேரணியில் ராமர் சீதை சிலைகள் ஆடையின்றி எடுத்து வரப்பட்டன என்றார்.

மேலும் ராமர் சீதை சிலைகளுக்கு செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தவறான தகவலை ரஜினி வெளியிடுகிறார் என்று பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் கருத்து தெரிவித்தன. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என இந்த அமைப்புகள் அறிவித்துள்ளன. பொது அமைதியை குலைக்க முயன்றதாக ரஜினி மீது சென்னை உட்பட பல்வேறு இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில்

நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

துக்ளக் ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு விளக்கம் அளிப்பதற்காகவே உங்களை சந்திக்கிறேன்.

நான் எதையும் கற்பனையாகவோ, தவறாகவோ பேசவில்லை. 2017-ம் ஆண்டில் அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதையும், நான் கேள்விப்பட்டதையும் வைத்து தான் பேசினேன்.
சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பதை பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. அந்த ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகள் ஆடையின்றி எடுத்து வரப்பட்டன. ஆடையில்லாமல் செருப்பு மாலைகள் அணிந்து எடுத்து வரப்பட்ட படங்கள் உள்ளன. இதை பலரும் ஊர்ஜிதப்படுத்தி விட்டனர். ஸாரி, இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனவே இதற்காக நான் மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என்றார்.

உங்கள் வீட்டை முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிட கழகத்தினர் கூறியிருக்கிறார்களே. நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்டோரும் வலியுறுத்தி வருகிறார்களே என்று கேட்டதற்கு, இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் இப்போது எல்லாவற்றையும் கிளீயர் செய்து விட்டேன்.

1971-ல் நடந்த சம்பவம் மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய ஒன்று. நான் இல்லாததையோ, கற்பனையாகவோ எதையும் பேசவில்லை. என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் பேட்டியை முடித்துக் கொண்டார்.

மேற்கொண்டு நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
பேட்டியின் போது அவுட்லுக் பத்திரிகையின் பிரதியை ரஜினிகாந்த் கையில் வைத்திருந்தார். அதில் வெளியான செய்தி மற்றும் படங்களை பத்திரிகையாளர்களுக்கு காட்டினார்.