‘மாயநதி’ பட விழாவில் முதல்வரை பாராட்டிய அமீர்

சினிமா

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் ‘மாயநதி’. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

விழாவில் இயக்குனர் அமீர் பேசும்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தமிழக அரசு சினிமா கலைஞர்களுக்கு இடம் ஒதுக்கி உள்ளது. அது விரைவில், வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பயப்படமாட்டார். ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன் என்றார்.